நெல்லை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 16-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை தி.மு.க எம்.பி ஞானதிரவியம் தலைமையில் பணகுடி அருகே ஆவரைகுளத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை டவுன் உழவர் சந்தை அருகே டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் தி.மு.க நிர்வாகிகள் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.
முக்கூடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பூங்கோதை எம்.எல்.ஏ., பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, முக்கூடல் நகர பேரூர் கழகம் லட்சுமணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ராதாபுரம் ஒன்றியம் மற்றும் திசையன்விளை பேரூர் சார்பில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, கரைசுத்துப்புதூர் ஊராட்சி அவை தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வடக்கன்குளத்தில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பணகுடியில் நகர செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாங்குநேரியில் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமையிலும், அம்பையில் நகர செயலாளர் பிரபாகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்லிடைக்குறிச்சியில் நகர செயலாளர் இசக்கிபாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சேரன்மாதேவியில் ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி தலைமையில், நகர செயலாளர் மணிஷா செல்வராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீரவநல்லூரில் நகர செயலாளர் அப்துல்ரகுமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசியில் கன்னிமாரம்மன் கோவில் தெரு பகுதியில் நகர செயலாளர் சாதிர் தலைமையிலும், கூலக்கடை பஜார் பகுதியில் முன்னாள் நகரசபை தலைவர் கோமதிநாயகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கொடிமரம், மவுண்ட் ரோடு உள்பட 15 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கோட்டையில் நகர செயலாளர் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் ஆலோசனையின்பேரில் கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க மற்றும் நகர கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் வார்டு வாரியாக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 16-வது வட்ட அவைத்தலைவர் வீனஸ் முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.