புதுடெல்லி,
அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கோலஸ் பர்ன்சுடன் சமீபத்தில் உரையாடிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அடையாளமாக விளங்கிய திறந்த நிலை மற்றும் சகிப்புத்தன்மையின் மரபணு மறைந்து விட்டதாகவும், பிரிவினையை உருவாக்குபவர்கள் தற்போது தங்களை தேசியவாதிகள் என கூறி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு நேற்று பதிலளித்த மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான முக்தர் அப்பாஸ் நக்வி காங்கிரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி இன்னும் நிலபிரபுத்துவ சட்டமுறையிலேயே இருக்கிறது. இந்தியாவின் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்க மரபணுவை காங்கிரசால் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.
சகிப்பின்மையால் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர் பிரதமர் மோடி என்று கூறிய நக்வி, இந்த கொரோனா காலத்தில் நோய்தொற்றை கட்டுப்படுத்த துணை நிற்காமல் அரசியல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும், இந்த இடுக்கண் நேரத்திலும் இந்தியாவை காங்கிரஸ் அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.