விருதுநகர்,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதற்கட்ட தேர்தல் வருகிற 11ந்தேதி தொடங்குகிறது. இதனுடன் சேர்த்து தமிழக சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி அமைத்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்று உள்ளது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் பொது கூட்டம் நடந்தது. இதற்காக மேடை அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.
இதனை பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் நாற்காலிகள் காலியாக கிடந்துள்ளன. இதனை அவர் படம் பிடிக்கிறார் என கூறி அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ஆத்திரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதன்பின் மற்ற தொண்டர்கள் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து அங்கிருந்து இழுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.