செய்திகள்

அசோக் கெலோட் அரசை கவிழ்க்க பாஜக சதி, தெளிவாக தெரிகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அசோக் கெலோட் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக சதி செய்திருப்பது இப்போது தெளிவாக தெரிகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்ப்பூர்

முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடியால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை கூட்ட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபை கூடுவதற்கான தேதியை அறிவிக்கும் வரை அங்கிருந்து செல்லமாட்டோம் என கூறிய அவர்கள், மதிப்புக்குரிய கவர்னரே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், சட்டசபையை கூட்ட வேண்டாம் என்று யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அது குறித்த விளக்கம் அளித்தால், சட்டசபையை கூட்டுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், போராட்டத்தை கைவிட்டு முதல்-மந்திரியுடன் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றனர்.

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அசோக் கெலோட் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக சதி செய்திருப்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி நாடு ஆளப்படுகிறது. மக்கள் தேர்ந்தெடுக்கும் அடிப்படையில் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. ராஜஸ்தான் அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக உள்ளது. இது ராஜஸ்தானின் 8 கோடி மக்களை அவமதிப்பதாகும். கவர்னர் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்த அழைப்பு விடுக்க வேண்டும்,அப்போது நாட்டில் உண்மை வெளிவரும் என்று கூறி உள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு