நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, நேற்று முன்தினம் வரை 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில், 91 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 38 பேர் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 11 பெண்கள் உள்பட மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சேந்தமங்கலம் துத்திகுளத்தை சேர்ந்த 38 வயது ஆண் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி ரெட்டிக்காலனி, பட்டதையன்குட்டை, குப்பநாயக்கனூர், பச்சுடையாம்பட்டிபுதூர், மேட்டுப்பட்டி, வாழவந்தி, மேதராமாதேவி பகுதிகளை சேர்ந்த 10 பெண்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாண்டமங்கலம் அருகே முனியன் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த 32 வயது பெண், குச்சிபாளையத்தை சேர்ந்த 30 வயது பெண் ஆகிய இருவரும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் ராசிபுரத்தை சேர்ந்த 31 வயது நிரம்பிய துப்புரவு தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். திருச்செங்கோடு அருகே மண்கரட்டிபாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், காட்டூர் பகுதியை சேர்ந்த 25 வயது நிரம்பிய வாலிபர், கர்நாடகாவில் இருந்து சித்தாளந்தூர் வந்த 22 வயது நிரம்பிய வாலிபருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மிக குறைவான எண்ணிக்கையிலேயே உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.