பீஜிங்,
கொரோனா வைரஸ் பிறப்பிடம், சீனாவின் உகான் நகர கடல்வாழ் உயிரின மாம்ச சந்தை என்றுதான் இன்று வரை சொல்லப்படுகிறது. உகானை பதம்பார்த்த அந்த வைரஸ் பின்னர் சீனா முழுவதும் பரவியது.
அதைத் தொடர்ந்து நமது நாடு உள்பட 200-க்கும் மேற்படட நாடுகளில் நுழைந்து விட்டது. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாகத்தான் மனித குலம் கழித்துக்கொணடிருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப தொடங்கி இருந்தனர்.
ஆனால் சீனாவின் தலைநகர் பீஜிங், இப்போது கொரோனா வைரசால் ஆட்டம் காணத்தொடங்கி இருக்கிறது. தலைநகர் ஆட்டம் காணத்தொடங்கி இருப்பது ஒட்டுமொத்த சீனாவுக்கும் எச்சரிக்கை மணியாக அமைந்து இருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை.
கொரோனா பீஜிங்கிற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் உள்ளூர் நிர்வாகமும் சரி, ஜின்பிங் அரசும் சரி தீவிர கவனம் செலுத்தி வந்தன.
56 நாட்களுக்கு பிறகு பீஜிங்கில் கடந்த 11-ந் தேதி பீஜிங்கில் ஒருவருக்கு தொற்று உறுதியானது என்பது சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு முதல் அதிர்ச்சி. தலைமை பீடத்துக்குள் மீண்டும் கொரோனா வந்து விட்டதா என்று.
அடுத்த அதிர்ச்சி, மறுநாளும் (நேற்று முன்தினம்) பீஜிங்கில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது அடுத்த அதிர்ச்சி.
தொடர்ந்து மூன்றாவது நாளாக பீஜிங்கில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக, இப்போது தலைநகரில் 9 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. ஒரே நாளில் சீன நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதை சீன தேசிய சுகாதார கமிஷனும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
இது கொரோனாவின் இரண்டாவது அலைகளா என்ற கேள்வி ஒரு புறம் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
மீன் வெட்டும் பலகையில் கொரோனா...
இந்த நிலையில் பீஜிங்கில் உள்ள ஜின்பாடி சந்தையில், இறக்குமதி செய்யப்படுகிற சால்மன் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது, அதிர்ச்சியின் உச்சத்துக்கு பீஜிங்கை கொண்டு சென்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த சந்தையில் தொடர்புடைய 9 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படடு, கொரோனா தொற்று இல்லை என்றபோதும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதை அந்த சந்தையின் தலைவர் ஜாங் யுக்சி தெரிவித்து இருக்கிறார்.
கிட்டத்தட்ட 2 மாதங்களாக கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தலைநகரில் மீண்டும் தொற்று நுழைந்திருப்பது அதிகாரிகளை பரபரப்பாக செயல்பட வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி பீஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று எழுச்சி பெற்றுவிடுமோ என அதிகாரிகளை கவலைப்படவும் வைத்து இருக்கிறது.
இரண்டாவது அலை வீசுவதற்கான சூழலை அகற்றுவதற்காக போர்க்கால நிலையை பராமரிக்க உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என பீஜிங் நகர ஆளும் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கெய் குய் கூறி உள்ளார்.
அதே நேரத்தில் கொரோனா தொற்று நோய் முடிவுக்கு வராத காரணத்தால் இப்படி அடிக்கடி தொற்று ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்று சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2 கோடி மக்கள் வாழும் நகரம்
இருந்தாலும் பீஜிங்கில் வாழ்கிற 2 கோடி மக்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்திருப்பதால், மீண்டும் கொரோனா தொற்று எழுச்சி பெறாது என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை பீஜிங்கில் தொற்று உறுதி செய்யப்பட்ட பெங்டாய் சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் 2 பேரும், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. லியு என்று அழைக்கப்படுகிறவர், சாண்டோங் மாகாணத்தில் உள்ள கிங்டாடோவுக்கு 5 நாட்கள் பயணம் சென்றுவந்துள்ளார். எஞ்சிய இன்னொருவருக்கு பயண வரலாறு இல்லை.
சந்தைகள் மூடல்...
பீஜிங் நகரில் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், அதுவும் மீன் வெட்டும் பலகையில் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், ஜின்பாடி சந்தையில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி வர்த்தக மையமும், பெங்டாய் ஜிங்ஷென் கடல்வாழ் உயிரிய மாமிச சந்தையும் மூடப்பட்டு விட்டன. (வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இங்கு சென்று வந்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த சந்தை மூடப்பட்டு இருக்கிறது.)
இந்த சந்தைகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள், மாமிச வியாபாரிகள் அனைவருக்கும் நியுக்ளிக் அமில பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பீஜிங் நகரில் 6 மொத்த விற்பனை சந்தைகளில் வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையையும் உள்ளூர் நிர்வாகம் ஒத்தி போட்டுள்ளது. இதுபற்றி பீஜிங் நகராட்சி நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் கூறும்போது, கொரோனா தொற்று நோய் அபாயம் இருக்கிறது. எனவே வழக்கமான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் மந்தமாக இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.
ஆக மொத்தத்தில் பீஜிங் பதற்றத்தின் பிடியில் இப்போது சிக்கி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.