செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறையாக அறிவிப்பு: புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - சட்டசபையில் நாராயணசாமி தகவல்

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி,

உலகையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு நிவாரண தொகைகள் அளிப்பதுடன், வாரிசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மாநில அரசுகள் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அந்த வகையில் புதுவை அரசு முதன்முதலாக தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்கப்படாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கப்படும் என புதுவை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றைய கூட்டத்தில் கொரோனா தொற்று குறித்து எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடந்தது. அதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்துவரும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் முதன் முதலாக மாகி பகுதியில் தான் கொரோனா தொற்று வந்தது. டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் மூலமாக புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் பரவியது. அடுத்து சென்னையில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரித்தது.

பிரதமர் மோடி கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தார். ஆனால் புதுவையில் மார்ச் 23-ந் தேதியே அமல்படுத்திவிட்டோம். அதன்பின் ஒரு மாதம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 என்ற அளவில் இருந்தது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டதும், மாநில எல்லைகளை மூடியது தான் இதற்கு காரணம். அந்த அளவுக்கு கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திருந்தோம்.

நானும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் மாகி சென்று ஆய்வு செய்தோம். அமைச்சர்களுடன் மற்ற பகுதிகளிலும் ஆய்வு நடத்தினோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்கு தேவையான நிவாரண நிதி வழங்கப்பட்டது. மத்திய அரசு கூறிய விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக கடைபிடித்தோம். இதன் மூலம் கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த காலத்தில் சுகாதாரம், காவல், வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் அல்லும் பகலும் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,420 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,400 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 987 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் கொரோனா இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 1.4 சதவீதம் தான். இதற்காக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி 5 முறை காணொலி காட்சி மூலம் பேசி உள்ளார். இதில் 3 முறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக பாராட்டு தெரிவித்தார். மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்க நிதியுதவி வேண்டும் என்று கேட்டேன். அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.9 கோடியே 16 லட்சம் வந்துள்ளது. இந்த தொகையில் ஏற்கனவே ரூ.12 லட்சம் செலவு செய்துவிட்டோம். கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.700 மதிப்புள்ள அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கப்படும். புதுவை அரசின் சார்பு நிறுவனமான அமுதசுரபி மூலம் இந்த பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக நிதி வழங்க எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாநில அரசின் வருவாய் 58 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு வழங்க வேண்டிய நிதி எதையும் வழங்கவில்லை.

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.490 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. இதனை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த தொகை கிடைத்ததும் மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இட வசதியில்லை. இன்னும் 5 ஆயிரம் படுக்கைகள் தேவை.

ஜிப்மரில் 500 படுக்கைகள் தர வேண்டும் என்று இயக்குனரை சந்தித்துப் பேச உள்ளேன். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகளிடம் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் பேச்சுவார்த்தை நடத்துவார். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அரசு மூலமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை கையகப்படுத்தி, அதில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதே அரசின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை