செய்திகள்

கொரோனா போரில் வெற்றி நிச்சயம்: காணொலி காட்சி மூலம் பெங்களூரு பல்கலைக்கழக வெள்ளி விழாவில் - பிரதமர் மோடி பேச்சு

டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ- சுகாதாரத்துறையினர் உயிர் காக்கும் வீரர்கள். இவர்களின் அயராத உழைப்பால் கொரோனா போரில் வெற்றி நிச்சயம் என்று பெங்களூரு பல்கலைக்கழக வெள்ளி விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சியில் கலந்துகொண்டு, வெள்ளி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- கர்நாடக அரசு, சரியான முறையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. இதற்காக கர்நாடகத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன். இதற்கு காரணமான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் உள்பட அனைவரையும் பாராட்டுகிறேன். அடுத்து வரும் நாட்களில் இன்னும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

கொரோனா நமது கண்ணுக்கு தெரியாத எதிரி. அதற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுபட்டு போராடி வருகிறது. நமக்கு இன்று வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைத்தே தீரும். டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையினர் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் என்னை பொறுத்தவரையில் உயிரை காக்கும் ராணுவ வீரர்களை போன்றவர்கள். தற்போது, டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை நாடு நன்றியுடனும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது. உங்களிடம் இருந்து கவனிப்பையும், குணப்படுத்துதலையும் நாடு எதிர்பார்க்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. 2-வது உலக போருக்கு பின்பு இன்று உலகம் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. இந்த கொரோனாவை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும். கொரோனாவால் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. கீழே சரிந்து விழுந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நாடு முழுவதும் மேலும் 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 30 ஆயிரம் மருத்துவ இடங்களை உருவாக்கியுள்ளோம். புதிதாக மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளோம். ஆயினும் மருத்துவ முறையில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. கொரோனா தொடக்கத்தில் உடல் கவச உடைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் அந்த கவச உடைகளை தற்போது நமது நாட்டிலேயே தயாரிக்கிறோம். தற்போது 1 கோடி உடல் கவச உடைகளை தயாரித்துள்ளோம். என்.95 என்று சொல்லக்கூடிய முகக்கவசம் உற்பத்தி செய்கிறோம். இதுவரை 1.25 கோடி முகக்கவசங்கள் தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வினியோகம் செய்துள்ளோம். எல்லாவற்றையும் நாமே உற்பத்தி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். 2025-ம் ஆண்டுக்குள் நமது நாடு காசநோயில் இருந்து முழுமையாக விடுபடவேண்டும்.

காசநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் எந்த ஒரு நாட்டுக்கும் அபாயகரமானது. இதை ஒழிக்க அனைத்து நாடுகளும் கைகோர்த்து பணியாற்ற வேண்டும். தற்போதைக்கு நம்மை மனிதநேயம் மட்டுமே காப்பாற்ற வேண்டும். தூய்மை பாரத திட்டத்தால் நாட்டில் சில மோசமான நோய்கள் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். மருத்துவ துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கடந்த 25 ஆண்டுகளில் இந்த ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சர்வதேச அளவிற்கு வளர்ந்துள்ளது. நான் இன்று மிகுந்த பெருமையுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் நான் இந்த விழாவில் பங்கேற்க பெங்களூருவுக்கு நேரடியாக வந்திருப்பேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையால் என்னால் நேரில் வர முடியவில்லை. இங்கு படித்தவர்கள், படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் நாட்டின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ துறையில் இன்னும் சாதனைகளை புரிந்து, உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்த வேண்டும்.

தொலை மருத்துவ சேவை அதிகளவில் கிடைக்க வேண்டும். இதில் புதிய விஷயங்களை புகுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மருத்துவ துறையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவ துறையினருக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை அதிகமாக கிடைக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும். நாட்டில் 12 கோடி பேர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.

இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றியதுடன், முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து