ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து ஜெ.ஜெ.நகர், லட்சிவாக்கம், பேரண்டூர், சென்னங்காரணி, கண்டிகை, சூளமேனி உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப் படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக் கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர் மின் வெட்டால் நீர் பாய்ச்ச முடியாமல் நெல் பயிர்கள் கருகின. இந்தநிலையில் தொடர் மின் வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வக்கீல் சாம்சித்தார்த்தன் தலைமையில் பாலவாக்கம் துணை மின்நிலையம் எதிரே ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கருகிய நெல் பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்த், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் இடையே மணி நேரம் வாகன போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.