ஜம்மு,
ஜம்மு பகுதிக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டன. கடைகள், கல்வி நிறுவனங்கள் திறப்பாலும், வாகனங்கள் இயங்குவதாலும் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் காஷ்மீர், கார்கிலில் ஊரடங்கு தொடர்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தையும் 2 ஆக பிரிக்கிறது. இதற்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த 5-ந் தேதி முதல் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் தொலைதொடர்பு வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டதுடன், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனால் கடந்த சில நாட்களாக முடங்கி இருந்த காஷ்மீர் மக்களின் வாழ்க்கை தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை நோக்கி திரும்புகிறது. குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழாததால், அங்கு கட்டுப்பாடுகளை விலக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி இந்த பிராந்தியத்துக்கு உட்பட்ட ஜம்மு, கதுவா, சம்பா, உதம்பூர் மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் நேற்று அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால் கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.
வாகனங்கள் இயங்கியதால் அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை அதிகரித்து இருந்தது. கடைகள் திறந்திருந்ததால் மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் அவர்கள் ஒருவித நிம்மதியை வெளிப்படுத்தினர்.
மேலும் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட கிஸ்த்வார் மாவட்டத்தின் பல நகரங்களில் ஒரு மணிநேரம் என்ற அடிப்படையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதைப்போல தோடா மாவட்டத்தின் பதர்வா நகரிலும் பல கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
ஆனால் இந்த பிராந்தியத்தின் பூஞ்ச், ரஜோரி, ராம்பன் மாவட்டங்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கின்றன. எனினும் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நேற்று முன்தினம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தன. அப்போது மக்கள் அமைதியாக தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதைப்போல காஷ்மீர், கார்கில் பகுதிகளில் இன்னும் பதற்றமான நிலையே தொடர்வதால், அங்கு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, கார்கில் பகுதியில் 4 பேர் சேர்ந்து நடந்து செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போனில் மட்டும் பேச முடிகிறது.
இதற்கிடையே ஸ்ரீநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவில் ஆங்காங்கே சிலர் கூடி தவறான எதிர்ப்புகளை பதிவு செய்ததாகவும், இதில் எதிலும் 20 பேருக்கு அதிகமாக கூடவில்லை என்றும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.