திருவாரூர்,
அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அண்ணா திராவிட கழகத்தின் சார்பில் நடந்தது. இதனையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஊர்வலமாக புறபட்டு பஸ் நிலையம் கடைவீதி வழியாக அய்யனார் கோவில் தெரு அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது நகர செயலாளர் மகேஷ் உடன் இருந்தார்.
இதனையடுத்து திருவாரூர் பிடாரி கோவில் தெருவில் அண்ணா திராவிட கழகத்தின் கட்சி அலுவலகத்தை பொதுச்செயலாளர் திவாகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர்கள் மெச்சத்தகுந்த தலைவராக அண்ணா வாழ்ந்தார். திராவிட இயக்கத்தை அரியணை ஏற்றியவர். மத்திய அரசின் இடைக்கால நிதி பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை ரூ.6 ஆயிரம் என்பது குறைவாக உள்ளது. தேர்தலை மையப்படுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக கூறினாலும், இந்த பட்ஜெட் மக்களை கஷ்டப் படுத்தவில்லை.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தடையாக அண்ணா திராவிட கழகம் ஒரு போதும் இருக்காது. கருத்து கணிப்பில் அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் சரிசமமான வாக்குகள் இருப்பதாக வருகின்ற தகவல், தினகரன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகின்றனர். விஷக்கிருமியாக உள்ள தினகரனை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன்.
தங்க.தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க.வில் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் தினகரன் அனைவரையும் கஷ்டப்படுத்தி வருகிறார்.
தினகரன் நடத்துகின்ற அ.ம.மு.க. கட்சி ஒரு மூழ்கும் கப்பல். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.