செய்திகள்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ‘லீப்’ ஆண்டில் பிறந்த 13 குழந்தைகள்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ‘லீப்’ ஆண்டில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன.

திண்டுக்கல்,

ஆங்கில மாதத்தில் பிப்ரவரியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்கள் வரும். இதனால் பிப்ரவரி மாதம் 29-ந்தேதி ஒரு அரிய நாளாக கருதப்படுகிறது. இது ஆங்கிலத்தில் லீப் ஆண்டு என குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறந்தநாள் கொண்டாட முடியும். மேலும் அவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும் லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந்தேதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று பல பிரபலங்கள் லீப்ஆண்டில் பிறந்துள்ளனர். இதனால் லீப் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தனிச்சிறப்பு கிடைக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிப்ரவரி மாதம் 29-ந்தேதி இந்த ஆண்டு (2020) நேற்று முன்தினம் அமைந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 13 கர்ப்பிணிகளுக்கு நேற்று முன்தினம் 13 குழந்தைகள் பிறந்தன. இதில் 9 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் அடங்கும். 13 குழந்தைகளில் 6 குழந்தைகள் அறுவை சிகிச்சை முறையிலும் மற்ற குழந்தைகள் சுகப்பிரசவமாகவும் பிறந்தன.

குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் உடல் ஆரோக்கியமுடன் உள்ளதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர். லீப் ஆண்டில் குழந்தைகள் பிறந்ததால் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.