சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.
இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி, கீ.வீரமணி, முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. பேராசிரியர் க. அன்பழகனின் மறைவையொட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.