செய்திகள்

ரெயில் பயண கட்டண உயர்வு குறைவாக இருப்பது நிம்மதியை தருகிறது டாக்டர் ராமதாஸ் அறிக்கை

ரெயில் பயண கட்டண உயர்வு குறைவாக இருப்பது நிம்மதியை தருகிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெயில் கட்டணம்

ரெயில் பயணிகள் கட்டணம் புத்தாண்டு முதல் கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மிகவும் குறைவாக இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரெயில்களின் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என்பது தான் பா.ம.க.வின் நோக்கமாகும். அதை மனதில் கொண்டு தான் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் ரெயில்வே இணை மந்திரிகளாக இருந்த காலங்களில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை கட்டணம் குறைக்கப்பட்டது.

எனினும், கடந்த 5 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது; ரெயில்வேயின் இயக்கச்செலவுகள் அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களாலும், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் ரெயில்களில் அதிகபட்ச கட்டண உயர்வு ரூ.10 தான் என்பதாலும் அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

கைவிட வேண்டும்

இவைதவிர, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் ரெயில்வே கட்டணத்தை விமானக்கட்டணத்தை விட கூடுதலாக உயர்த்தும் முறை நியாயமற்றதாகும். இந்த முறையில், அண்மையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான கட்டணமாக ரூ.2,440 வசூலிக்கப்பட்டுள்ளது.

இது இயல்பான கட்டணத்தை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். இதுவும் ஒருவகையான சுரண்டல் தான் என்பதால், இம்முறையை முற்றிலுமாக கைவிட ரெயில்வே முன்வர வேண்டும். ரெயில் பெட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு இருப்பதை களைய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...