செய்திகள்

ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் 5 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, கிராம பஞ்சாயத்து, பாணி சமிதி, கிராம நீர் மற்றும் சுகாதார குழுக்களுடன் நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.

அப்போது அவர், நாடு முழுவதும் கிராமங்களில் வாழ்கிற மக்களுக்கு வீடுகள் தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜல்ஜீவன் மிஷன் திட்டம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவும், திட்டத்தின்கீழ் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜல்ஜீவன் மிஷன் செயலியை தொடங்கி வைத்தார்.

கிராமங்களில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆசிரமங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்கு தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் பங்களிப்பை வழங்குவதற்காக ராஷ்ட்ரீய ஜல்ஜீவன் கோஷ் என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய மந்திரிகள் கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகலாத் சிங் படேல், பிஷ்வேஸ்வர் துடு, முதல்-மந்திரிகள், மாநில மந்திரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண்ணுடன் ஜல்ஜீவன்மிஷன் திட்டத்தின் பலன் பற்றி அவர் கலந்துரையாடினார்.

இதே போன்று உத்தரபிரதேச மாநிலம், உமரீ கிராமத்தை சேர்ந்த கிரிஜாகாந்த் திவாரி, குஜராத் மாநிலம், பிப்லியை சேர்ந்த ரமேஷ்பாய் படேல், உத்தரகாண்ட் மாநிலம், கவுசல்யா ராவத், மணிப்பூர் மாநிலம், லாய்தான்தேம் சரோஜினி தேவி என பலருடன் அவர் கலந்துரையாடினார்.

தொடர்ந்து மோடி பேசுகையில் கூறியதாவது:-

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இதயங்களின் அங்கங்களாக கிராமங்கள் திகழ்ந்தன. இந்த நாளில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் ஜல்ஜீவன் சம்வாத் என்ற பெயரில் நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் தொலைநோக்கு, மக்களுக்கு தண்ணீர் கிடைக்கச்செய்வது மட்டுமல்ல, இது அதிகார பரவலாக்கத்தின் ஒரு பெரிய இயக்கம். இது கிராமங்கள் சார்ந்த, பெண்கள் சார்ந்த இயக்கம், இதன் முக்கிய அடிப்படை, இதை ஒரு மக்கள் இயக்கமாக, பொதுமக்களை பங்கேற்கச்செய்வதாகும்.

கிராம சுயராஜ்யம் என்பது முழுமையான தன்னம்பிக்கை என்று மகாத்மா காந்தி கூறுவார். அதனால்தான் கிராம சுயராஜ்ய சிந்தனை, சாதனைகளை நோக்கி முன்னேற வேண்டும் என்பது எனது தொடர்ச்சியான முயற்சியாக இருக்கிறது.

குஜராத் முதல்-மந்திரி பதவி வகித்தபோது கொண்டு வந்த திட்டங்களில், திட்டங்கள திட்டமிடுவதிலும், நிர்வகிப்பதிலும் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த பணியாற்றினேன். குறிப்பாக தண்ணீர் மற்றும் தூய்மைக்காக இதை செய்தேன்.

கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேலாக நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரங்களுடன், ஊராட்சிகளின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. கிராம சுயராஜ்யம் என்பதை நோக்கிய மத்திய அரசின் அர்ப்பணிப்பில் ஜல்ஜீவன் மிஷன் மற்றும் பாணி சமதிகள் எடுத்துக்காட்டு.

குடிதண்ணீருக்காக பெண்களும், குழந்தைகளும் பல மைல் தொலைவுக்கு நடந்து சென்றதை திரைப்படங்கள், கதைகள், கவிதைகள் விவரித்தது உண்டு.

அப்போது தான் சிலருக்கு கேள்வி எழுந்தது. எதற்காக குடிதண்ணீருக்காக ஆறுகளையும், குளங்களையும் இந்த மக்கள் தினமும் தேடிச்செல்ல வேண்டும், இந்த தண்ணீர்- மக்களைச் சென்றடையக்கூடாதா என்று.

கொள்கைகளை வகுக்கிற இடத்தில் இருந்தவர்கள் (காங்கிரஸ் ஆட்சியில்) குடிநீரின் முக்கியத்துவத்தை உணர வில்லை. ஏனென்றால், அவர்கள் தண்ணீர் வளமிக்க பகுதிகளில் இருந்து வந்தவர்கள். குஜராத் மாநிலத்தில் இருந்து நான் வந்ததால், வறட்சியை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு சொட்டு தண்ணீரின் முக்கியத்துவமும் எனக்கு தெரியும். எனவே நான் குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், தண்ணீரை பாதுகாப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தேன்.

நாடு விடுதலை அடைந்த நாள் முதல் 2019-ம் ஆண்டு வரையில் நாட்டில 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைத்தது. ஆனால் 2019-ம் ஆண்டு இந்த ஜல்ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கியதில் இருந்து 5 கோடி வீடுகளுக்கு குழாய் வழி குடி நீர் இணைப்புகள் கிடைத்துள்ளன.

இன்றைக்கு நாட்டின் 80 மாவட்டங்களில் ஒன்றேகால் லட்சம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியாக குடிநீர் போய்ச் சேருகிறது.

சென்ற 70 ஆண்டுகளில் செய்து முடித்ததை விட கூடுதலான பணிகள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் வளமிக்க பகுதிகளில் வசிக்கிற ஒவ்வொருவரும் தண்ணீரை பாதுகாப்பதற்கு இன்னும் கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

நாட்டின் மகள்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிக்கூடங்களிலும் கழிவறைகள் கட்டவும், மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவு வழங்கவும், தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இரண்டரை கோடி வீடுகள் பெண்களின் பெயர்களால் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டம், விறகு கொண்டு சமைத்ததால் ஏற்பட்ட புகையில் இருந்து பெண்களுக்கு விடுதலை தந்துள்ளது. சுய சார்பு திட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் இணைக்கப்படுகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.