புதுடெல்லி,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன், ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரமும் (வி.வி.பாட்) சமீப காலமாக தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக தற்போதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை மட்டுமே தேர்தல் கமிஷன் எண்ணி வரும் நிலையில், ஒரு தொகுதியின் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தையாவது எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இந்தியாவில் 4,120 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 20,600 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவதற்கான நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் ஈடுபட உள்ளது. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2,500 வரை வாக்குகள் பதிவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
முதல் முறையாக இவ்வளவு அதிக ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் இந்த மிகப்பெரிய பணியை தேர்தல் பணியாளர்கள் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.
இதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டு அலகில் பதிவாகி இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கைக்கும் முரண்பாடு காணப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் எனவும், இறுதியில் ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கையையே கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஆனால் இதுவரை ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட்டு உள்ள தேர்தல்களில், கட்டுப்பாட்டு அலகு காட்டும் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கைக்கும் முரண்பாடு வந்ததில்லை என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.