புதுடெல்லி,
சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்துவிட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டு வருவதால் இந்த குறிப்பிட்ட மனு தற்போது செயலிழந்துள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 6-ந்தேதி ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தியுள்ளது. எனவே சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை குளிர்கால விடுமுறை முடிவடைந்தபிறகு வருகிற 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை பதிவாளர் கூறியதாக வக்கீல் ஜி.எஸ்.மணி தெரிவித்தார்.