செய்திகள்

மின்சார சட்டத் திருத்த முன்வரைவை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் நலனுக்கு எதிரான மின்சார சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான சட்டத் திருத்த முன்வரைவு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இலவச மின்சாரத்தை அடுத்த 3 ஆண்டுகளில் நிறுத்த வேண்டும் என்பதற்கான மறைமுக அழுத்தத்தையும் மத்திய மின்சார சட்டத்திருத்தம் அளிக்கிறது. விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக கைவிட வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் மின்வாரியங்களின் வருவாய் கணிசமாக குறையும்; இலவச மின்சாரத்திற்காக அரசு வழங்க வேண்டிய மானியம் அதிகரிக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகம் போன்ற மாநிலங்கள் தள்ளப்படும். இது தான் மத்திய அரசின் விருப்பம். ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விவசாயிகள் தான் உலகுக்கு சோறு படைக்கும் கடவுள்கள். அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும், தொடர்ந்து தீமை இழைத்து அவர்களை உயிருடன் அழிக்கும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக்கூடாது. விவசாயிகள் நலனுக்கு எதிரான மத்திய மின்சார சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும்; இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.