செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவை மாற்றத்தில் குளறுபடி பயணிகள் கடும் அவதி

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவை மாற்றத்தில் செய்யப்படும் குளறுபடிகளால் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் நம்பி இருப்பது மின்சார ரெயில்களைத்தான். பஸ் கட்டண உயர்வு, இரவு 10 மணிக்கு மேல் சில இடங்களுக்கு பஸ்கள் கிடையாது என்பதால் வேலைக்கு செல்பவர்கள் இரவு 12 மணி வரை மின்சார ரெயில்களை நம்பிதான் சென்று வருகிறார்கள்.

தற்போது சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக வருகிற 4-ந்தேதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டும், தாம்பரம்-கடற்கரை வரையிலான மின்சார ரெயில்கள் கடற்கரை-பூங்கா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சென்னை பூங்கா வரையே இயக்கப்படுகிறது.

இதனால் தாம்பரத்தில் இருந்து பூங்கா ரெயில் நிலையம் வரும் மின்சார ரெயில், மீண்டும் தாம்பரம் செல்ல திரும்பி வருவதற்கு குறைந்தது 10 நிமிடங்களாவது ஆகிறது. இதனால் அடுத்தடுத்து தாம்பரம்-பூங்கா இடையே வரும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் நிலை உள்ளது.

இதன்காரணமாக காலை வேளையில் வேலைக்கு செல்பவர்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் செல்ல வருபவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். நடுவழியில் மின்சார ரெயில்களை நிறுத்தி விடுவதால் கீழே இறங்கி பஸ், ஆட்டோக்களிலும் செல்ல முடியாத நிலை உள்ளது.

நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை கடற்கரையில் இருந்து இயக்கப்படவேண்டிய மின்சார ரெயில்கள் பூங்கா நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டன.

இதனால் எழும்பூர்-சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே 4-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் அடுத்தடுத்து வரிசையாக அணி வகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

ரெயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மேற்கொள்ளலாம். அல்லது சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் மதியம் வேளையில் சில மின்சார ரெயில்களை நிறுத்தி பணியை செய்யலாம்.

இதுபோல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக முறையான அறிவிப்பை முன்கூட்டியே ரெயில்வே நிர்வாகம் தெரிவிப்பது இல்லை. ரெயில் நிலையங்களுக்கு வந்த பிறகுதான் ரெயில்கள் ரத்து பற்றி எங்களுக்கு தெரிகிறது.

ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களிடம் கேட்டால், எங்களுக்கே எதுவும் தெரியாது. அன்றைய தினம்தான் முடிவு செய்யப்படுகிறது என்கிறார்கள்.

இதுபோல் தண்டவாள பராமரிப்பு பணி செய்தால் முன்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழித்தடத்தில் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை மின்சார ரெயில் இயக்கப்படும். அதுவும் தற்போது செய்வது இல்லை.

தாம்பரத்தில் இருந்து பூங்கா வரையே மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது என முடிவு செய்தால் அதற்கு ஏற்றாற்போல் மின்சார ரெயில் சேவை எண்ணிக்கையை குறைத்து இயக்கினால் இதுபோல் நடுவழியில் ரெயில்களை நிறுத்தி பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டியது இல்லை.

இதனால் எங்களால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எழும்பூர், சென்டிரலில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பிடிக்க முடியவில்லை. நடுவழியில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து இறங்கி ஆட்டோ, பஸ்களில் செல்ல கூடுதல் செலவாகிறது. ரெயில்வே நிர்வாகம் எந்த முன்னேற்பாடும் செய்யாமல் இதுபோல் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்சார ரெயில் சேவை மாற்றத்தில் செய்யும் குளறுபடிகளால் பயணிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்