செய்திகள்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்னணு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பழையூர் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் மின்னணு எந்திரம் பழுதானது. இதையடுத்து மற்றொரு எந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரமும் பழுதானது. இதையடுத்து 3-வது எந்திரம் கொண்டு வரப்பட்டு காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் வாக்காளர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். சின்னாளப்பட்டியில் எந்திரங்கள் பழுதானதால், ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது.

திண்டுக்கல்- பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் எந்திரத்தின் பழுதை சரிசெய்தனர். இதனால் 1 மணி நேரம் கழித்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் பாலகிருஷ்ணாபுரம் வாக்குச்சாவடியிலும் எந்திரம் பழுதானது.

நாகல்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் திடீரென பழுதானது. இதனால் சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேட்டுப்பட்டி மாநகராட்சி பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால், ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் நேருஜிநினைவு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானதால், ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது.

நெய்க்காரப்பட்டி அருகே பெரியகலையம்புத்தூர் 12-வது வார்டு முஸ்லிம் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. தேர்தல் அலுவலர்கள் எந்திரத்தை சரிசெய்ய முயன்றனர். ஆனால், எந்திரத்தை சரிசெய்ய முடிவில்லை. இதையடுத்து மாற்று எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்து வாக்குப்பதிவுதொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8 மணி அளவில் 68 பேர் வாக்களித்து இருந்தனர். அப்போது மின்னணு எந்திரம் பழுதானது. இதையடுத்து 2 மணி நேரம் கழித்து மற்றொரு எந்திரம் கொண்டு வரப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் 2 மணி நேரம் வாக்காளர்கள் வாக்குச்சாவடி வளாகத்தில் காத்திருந்தனர். அதேபோல் வேடசந்தூர் ஆர்.எச்.காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாலை 3 மணிக்கு எந்திரம் பழுதானது. பின்னர் மற்றொரு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் பழுது நீக்கப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வேடசந்தூர் தொகுதியில் உள்ள 307 வாக்குச்சாவடிகளில் 15-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது நீக்கப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவுதொடங்கியது.

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதி 42 வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை வரிசையாக இல்லை. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் வாக்காளர்கள் தெரிவித்தனர். பின்னர் எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசைப்படி மாற்றி வைக்கப்பட்டு,வாக்குப்பதிவுநடந்தது.

வடமதுரையை அடுத்த வி.சித்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் எந்திரம் திடீரென பழுதானது. இதனால் தேர்தல் அதிகாரிகள் வந்து எந்திரத்தை சரிசெய்ய முயன்றனர். ஆனால், எந்திரத்தை சரிசெய்ய முடியவில்லை. இதனால் வாக்குச்சாவடி வளாகத்தில், வாக்காளர்கள் காத்திருந்தனர்.

ஒருசிலர் விரக்தியில் வீட்டுக்கு திரும்பி சென்றனர். இதற்கிடையே வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு, காலை 9.45 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாணார்பட்டி ஒன்றியத்தில் வேம்பார்பட்டி, மார்க்கம்பட்டி, கொரசினம்பட்டி, கணவாய்பட்டி, நரிவிலாம்பட்டி ஆகிய வாக்குச்சாவடி மையங் களில் நேற்று காலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் 30 நிமிடங்கள் வரை வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதியம் 12 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனை தொடர்ந்து மற்றொரு எந்திரம் கொண்டு வரப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவுதொடங்கியது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே உள்ள நகராட்சி பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் அங்கு சுமார் 45 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் எந்திரம் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல பூம்பாறை கிராமத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. உடனடியாக மாற்று எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வாக்குச்சாவடியில் பணிபுரிந்த தேர்தல் அலுவலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அங்கு சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாற்று அலுவலர் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளை நகராட்சி ஆணையாளர் முருகேசன், தாசில்தார் வில்சன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர்.

அதேபோல கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கூக்கால் ஊராட்சியை சேர்ந்த பெருங்காடு பகுதியில் சாலை வசதிக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளங்கி வாக்குச்சாவடி முன்பு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் 3 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

திண்டுக்கல் சிறுமலை அருகே பழையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதையடுத்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதனால் 2 மணி நேரம் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்தின் வெளியே காத்திருந்தனர்.

கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் 6.45 மணிக்கு மீண்டும் மின்வினியோகம் வந்த பின்பு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் வாக்காளர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது