திண்டுக்கல்,
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், திண்டுக்கல் இ.பி. காலனி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., தொ.மு.ச. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடந்தது.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, அரசு போக்குவரத்து கழகங்களின் வரவு-செலவு குறித்த நிதிநிலை அறிக்கையை வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு உடனே தொடங்க வேண்டும்.
குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வேலைப்பளு திணிப்பை அரசு கைவிட வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் கேட்ட போது, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தான் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் பொதுமக்கள், பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றனர்.