திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள காதி கிராப்டில் நேற்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது. திருச்சி கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் பாலகுமாரன் வரவேற்றார். விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி காந்தி படத்தை திறந்து வைத்து, கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் 3 மூதாட்டிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.
விழாவில் கலெக்டர் பேசுகையில், காந்தியடிகள் கண்ட கனவை நாம் அனைவரும் நனவாக்க பாடுபட வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாகவும், நெசவாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் அண்ணல் காந்தியடிகள் கண்ட கனவு நனவாகும்.
திருச்சி மாவட்டத்தில் கதர் விற்பனையில் கடந்த ஆண்டு ரூ.75 லட்சத்து 78 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.48 லட்சத்து 78 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.70 லட்சத்து 92 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு வாங்கும் ஜவுளி ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது என்றார். முன்னதாக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் ராஜாமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
காந்தி பிறந்த நாளையொட்டி திருச்சி விமான நிலையத்தில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் ஜோஷி, முனைய மேலாளர்கள் வேணுகோபால், சென் மற்றும் அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஸ்ரீரங்கம் எஜூகேஷனல் சொசைட்டி சார்பில், ஸ்ரீரங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்ற காந்தி பிறந்தநாள் விழா ஸ்ரீரங்கம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில் நூற்பு, வாசிப்பு, தூய்மை, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடைபெற்றது. மேலும் ராட்டை, கைத்தடி, கண்ணாடி, காலணி என்ற தலைப்புகளில் காந்தி கவியரங்கம் நடைபெற்றது. காந்தியின் 150-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலையில் காந்தி குல்லா அணிந்து 150 என்ற எண் வடிவில் அமர்ந்து பார்வையாளர்களை அசத்தினர்.
முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் காந்தி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி புகைப்பட கண்காட்சி, ஒலி-ஒளி காட்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
காந்திபிறந்தநாளையொட்டி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் காந்தி படத்திற்கு கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி தலைமையில் ரெயில்வே அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பயணிகளுக்கு வழங்கினர். அதன்பின் ரெயில் நிலைய நடைமேடையில் தூய்மை பணி நடந்தது. இதில் கோட்ட மேலாளர் உள்பட ரெயில்வே அதிகாரிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலைய நுழைவு வாயிலில் காந்தியடிகள் குறித்த தபால் தலை கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நேற்று திருச்சி சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது காந்தி பற்றிய பாடல்கள் பாடப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் காந்தி அஸ்தி மண்டபத்தில் மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருச்சி ஜங்ஷன் அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. காந்தி படத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் தர்மராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.