திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தற்போது 6-ம் கட்ட அகழாய்வு பணி கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள், நீதியம்மாள் ஆகியோர் நிலங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை காண வெளிநாடுகள், பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதில் உறைகிணறுகள், இரட்டைச்சுவர், சுருள் வடிவிலான சுடுமண் குழாய்கள், தண்ணீர் தொட்டி மற்றும் செப்புக்காசுகள், இரும்பு பொருட்கள், எலும்பு முனைகள், காதணிகள், சங்கு வளையல்கள் என பலபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் மதுரை தமிழ்ச்சங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது அந்த நிலங்களில் பயிர்கள் மற்றும் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.