செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலைக்கு வாங்கும் வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலைக்கு வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லணைக்கு அருகில் அமைந்துள்ள பகுதி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திருக்காட்டுப்பள்ளி பகுதி ஆகும். இந்த பகுதியில் நடப்பாண்டில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் ஆந்திரா பொன்னி, சிஆர் 1009, ஐஆர்20, கோ 43 உள்ளிட்ட ரகங்களை பயிர் செய்திருந்தனர்.

தொடர் மழையால் நெற் பயிர்களை ஆனைக்கொம்பன்நோய் தாக்கியது. இருந்த போதிலும் மருந்துகள் தெளித்து நோய் தாக்குதல்களில் இருந்து நெற்பயிரை காப்பாற்றினர். நெற்பயிர் விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் போதுமான அறுவடை எந்திரங்கள் கிடைக்காமல் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

ஆந்திரா பொன்னி ரக நெல்

இதை தொடர்ந்து அறுவடை எந்திரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 68 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. அறுவடையாகும் நெல் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப் படுகிறது.

தற்போது திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விவசாயிகளிடம் இருந்து ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஒரு நெல் மூட்டை (62 கிலோ) ரூ.1,250-க்கு கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகள் இந்த ரக நெல்லில் ஈரப்பதம்பார்ப்பதில்லை. நெல் தரமானதாக இருப்பதாக கருதினால் வயலுக்கே வந்து சாக்குகளில் மூட்டையாக கட்டி லாரிகளில் ஏற்றி மொத்தமாக எடை போட்டு தொகையை உடன் வழங்குவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

ஆந்திரா பொன்னி அரிசியை அனைவரும் விரும்பி உண்ணுவதாலும், இந்த ஆண்டு ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக அளவில் சாகுபடி செய்யாததாலும் தான் அதிக விலைக்கு விற்பனையாகிறது என்கின்றனர்.