கீழப்பழுவூர்,
மத்திய அரசு அறிவித்த திட்டமான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் மத்திய அரசின் அறிவிப்புப்படி ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் முதல் தவணை ரூ.2 ஆயிரம் பெற்ற விவசாயிகளுக்கு இரண்டாவது தவணையின் ரூ.2 ஆயிரமும் கிடைத்துவிட்டதாகவும், ஆனால் இன்னும் பலருக்கு முதல் தவணையே வந்து சேரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம விவசாயிகள் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி கீழக்கவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் கதிரவன், வருவாய் ஆய்வாளர் திருப்பதி மற்றும் திருமானூர் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் அவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் கூடிய விரைவில் பணம் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.