செய்திகள்

இறுதி பட்டியல் வெளியீடு:நெல்லை மாவட்டத்தில் 25 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக 55,672 பேர் சேர்ப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 25 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 55, 672 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை,

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நெல்லை மாவட்ட வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. பட்டியலை கலெக்டர் ஷில்பா வெளியிட சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் பெற்று கொண்டார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், நாங்குநேரி, ராதாபுரம் என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் முதன்மை வாக்காளர் பட்டியல், துணை வாக்காளர் பட்டியல் என இரண்டு பகுதிகளாக உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 48 ஆயிரத்து 485 பேர்களும், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து 108 பேர்களும், இதர வாக்காளர்கள் 90 பேரும் உள்ளனர். மொத்தம் 25 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 623 பேர் அதிகம்.

பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் என மொத்தம் 76 ஆயிரத்து 775 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 55 ஆயிரத்து 672 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதில் 26 ஆயிரத்து 972 பேர் இளம் வாக்காளர்கள் ஆவார்கள்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் சுமார் 34 லட்சத்து 14 ஆயிரத்து 497 மக்கள் தொகை உள்ளது. இதில் 74.32 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 979 வாக்கு சாவடிகள் உள்ளன.

புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் மூலம் நேரிடையாக வழங்கப்படும்.

தற்போது வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் வைக்கப்படும்.

மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக மாவட்ட தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புகார்கள் இருந்தால் 1950 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணுக்கு வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இது தவிர தேர்தல் ஆணையத்தால் vot-er he-l-p-l-i-ne என்று ஒரு செயலி வெளியிடப்பட்டு உள்ளது. அதனை ஆண்ட்ராய்டு மொபைலில், கூகுள்பிளே மூலம் பதிவிறக்கம் செய்து, வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? என சரிபார்த்து கொள்ளவும். விடுபட்டவர்கள்தேர்தல் முன்பு வரை விண்ணப்பித்தால் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

இது தவிர இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் www.nvsp.in மூலமாகவும் தகவல்களை தெரிந்து கொள்வதோடு, ஆன்லைன் விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரயணவரே, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, திருமலையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், காங்கிரஸ் கட்சி சார்பில் சொக்கலிங்ககுமார், மனோகரன், பா.ஜனதா சார்பில் மகராஜன், சுரேஷ், நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முகமது அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, நெல்லை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை