நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில், 90 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 22 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 25 வயது நிரம்பிய வாலிபர் உள்பட 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படைவீரரின் சொந்த ஊர் நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஆகும்.
இதேபோல் நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த 32 வயது நிரம்பிய நபருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இவர் சமீபத்தில் கர்நாடகா சென்று திரும்பியவர் ஆவார். மேலும் மோகனூர் அருகே ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த 36 வயது நிரம்பிய நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள நபர்கள் மூலம் நோய் தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் பகுதியை சேர்ந்த 42 வயது நிரம்பிய பெண் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் ஆவார்கள். சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் இருவரும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தி உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.