மும்பை,
மேற்கு மராட்டியத்தில் உள்ள புனே, சோலாப்பூர், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கோலாப்பூர், சாங்கிலி ஆகிய 2 மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது மழை ஓய்ந்து உள்ள நிலையில் படிப்படியாக வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் ஒருவாரமாக தேங்கிய வெள்ளத்தின் காரணமாக அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அங்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க மும்பையில் இருந்து மருத்துவக்குழு சாங்கிலி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களுக்கு விரைந்து உள்ளது. இந்த குழுவில் மும்பை மாநகராட்சியின் கே.இ.எம். மற்றும் சயான் ஆஸ்பத்திரி டாக்டர்கள், பூச்சியியல் துறை அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.
இதுபற்றி மாநகராட்சியின் சுகாதார நிர்வாக அதிகாரி டாக்டர் பத்மாஜா கேஸ்கர் கூறுகையில், இந்த மருத்துவ குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5 நாட்கள் தங்கியிருந்து மக்களுக்கு பரிசோதனைகள் செய்து நோய் தடுப்பு மருந்துகள் கொடுப்பார்கள். குறிப்பாக எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.