கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 51 அடியை எட்டியது. பின்னர் மழை பெய்வது நின்றதால், நீர்வரத்து குறைந்து, அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இதனிடையே கடந்த 3 நாட்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 347 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் முழுவதும், முதல் போக சாகுபடி பாசனம் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனிடையே நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் 177 கன அடியும், தென்பெண்ணை ஆற்றில் 258 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 3-வது முறையாக 51 அடியை எட்டியது.
அணைக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.