சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு பட்டாசு மாசு ஏற்படுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தை சேர்ந்த அர்ஜுன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பட்டாசு வெடிக்கவும், உற்பத்திக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசும், சில பட்டாசு உற்பத்தியாளர்களும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அர்ஜுன் தரப்பில், தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு சிவகாசியில் தற்போது சில பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் அது தங்கள் தயாரிப்பு இல்லை. போலியானவை என்று பதில் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை மண்டல சி.பி.ஐ. இயக்குனர், சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட போரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று விசாரணை நடத்தி 6 வாரத்திற்குள் அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைதொடர்ந்து சென்னையில் இருந்து சிவகாசி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்பையன், சுந்தரவேல் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் பேரில் சிவகாசி, சாத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 6 பட்டாசு ஆலைகளுக்கு கார்களில் சென்றனர்.
அந்த ஆலைகளில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக சில மாதிரிகளை சேகரித்தனர். மேலும் நேற்று காலையில் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்களையும் மாதிரிக்காக எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு பட்டாசு ஆலைகளிலும் 3 மணி நேரம் வரை இந்த விசாரணை மற்றும் ஆய்வு நடத்தப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையால் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த சி.பி.ஐ. குழுவினர், அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதன் கலவையையும், செய்து முடிக்கப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து எடுத்துச்சென்றனர். மத்திய ஆய்வகங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.