செய்திகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரூ.55 லட்சம் கதர் துணிகள் விற்பனை இலக்கு வருவாய் அலுவலர் வீரப்பன் தகவல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.55 லட்சத்துக்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.55 லட்சத்துக்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்தார்.

தூத்துக்குடி கிரிட் காட்டன் சாலையில் உள்ள காதி கிராப்டில் கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கலந்துகொண்டு, மகாத்மா காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி மரியாதை செலுத்தினார்.

மேலும், தீபாவளி சிறப்பு கதர் தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விழாவையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் சகுந்தலா, நயினாரம்மாள், வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணியன் ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கூறியதாவது;

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கிராமிய நூற்பு நிலையங்கள் மூலம் நூற்பு பணிகளும், கதர் உற்பத்தி கிளைகள் மூலம் நெசவு பணிகளும், வேலைவாய்ப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில், உடன்குடியில் கதர் உற்பத்தி கிளை செயல்படுகிறது. இதன் கீழ், இரு கிராமிய நூற்பு மையங்கள் செயல்படுகிறது. இந்த கிளைகளின் மூலம் 5 நெசவாளர்கள் மற்றும் 40 பெண் நூற்பாளர்கள் பயனடைகின்றனர்.

கதர் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொது மக்கள், அரசு துறைகள் மற்றும் அரசு பணியாளர்கள் விரும்பி வாங்குவதால் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கதர் மற்றும் கிராமப்பொருட்கள் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 20172018ம் ஆண்டில் ரூ.45 லட்சம் கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (201819) ரூ.55 லட்சம் கதர் துணிகள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், குருவிகுளம், உடன்குடி மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களிலும், தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைத்து, கதர் கிராம தொழில் வாரியத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை நிலையங்களில், தரமிக்க கதர் வேட்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், பெட்சீட்டுகள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்கள் மற்றும் தேன், குளியல் சோப்புகள், சாம்பிராணி, பூஜை பொருட்கள் பனைவெல்லம், பனைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று, கதர் மற்றும் பாலி வஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவகாமசுந்தரி, கதர் அங்காடி மேலாளர் ஸ்ரீதர், கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.