செய்திகள்

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழகத்துக்கு மோடி, ராகுல் காந்தி வருகை அமித்ஷா நாளை 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகம் வர இருக்கிறார்கள். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

சென்னை,

நாடு முழுவதும் வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 2-வது கட்டமாக இம்மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 845 பேர் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மாதம் 29-ந் தேதி மாலை வெளியான நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே வெயிலும் சுட்டெரித்து வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் வேட்பாளர்கள் அனைவரும் வீதி, வீதியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும், கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரசாரத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் 8-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

தொடர்ந்து, 13 மற்றும் 14-ந் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார். அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 13-ந் தேதி ராமநாதபுரம், தேனி ஆகிய இடங்களிலும், 14-ந் தேதி கோவை, ஈரோடு ஆகிய இடங்களிலும் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

அதேபோல், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வருகிற 10-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருச்சியில் இருந்து வேன் மூலம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அவர், சாலை மார்க்கமாக தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், சிதம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க இருக்கிறார். அவருடன் இணைந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வாக்கு சேகரிப்பார் என தெரிகிறது. இது தொடர்பாக, தி.மு.க. - காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை தமிழகம் வர இருக்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அத்தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாக்கு சேகரிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிவகங்கை மற்றும் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

தமிழகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதால், தேசிய கட்சிகளின் தலைவர்கள் பார்வை ஆரம்பத்திலேயே தமிழகத்தின் மீது விழத்தொடங்கிவிட்டது. அதனால், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்