செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட குளிச்சோலை பகுதிக்கு, பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் - நோய் தொற்று பரவும் அபாயம்

தனிமைப்படுத்தப்பட்ட குளிச்சோலை பகுதிக்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு காய்கறிகளை ஏற்றிச்சென்று வந்த குளிச்சோலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், லாரி டிரைவரின் உறவினர்கள் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறி தென்பட்ட குளிச்சோலை பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், நோய் தொற்று ஏற்படுத்தும் பகுதியாக (கிளஸ்டர்) அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வீடுகள் முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுகாதாரத்துறையினர் வேறு யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா? என்று வீடு, வீடாக ஆய்வு நடத்தி வருகின்றனர். நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட குளிச்சோலை பகுதியில் விவசாய பணிகளை மேற்கொள்ள ஊட்டி நகரில் இருந்து தொழிலாளர்கள் லாரிகளில் சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று ஊட்டி எல்க்ஹில், நொண்டிமேடு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்பட தொழிலாளர்கள் கேரட் அறுவடை செய்வதற்காக குளிச்சோலைக்கு லாரியில் அழைத்து செல்லப்பட்டனர். ஒரே லாரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 15 பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிய வில்லை. இதையடுத்து அதிக தொழிலாளர்களை ஏற்றிச்சென்றதாக போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொழிலாளர்கள் இருந்ததால் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி வீடுகளுக்குள் முடங்கினர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு, தற்போது பணிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் ஒரே இடத்தில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்ட பகுதிக்கு வேலைக்கு சென்று வருவது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு வேலைக்கு சென்று வருகிறார்கள். இதனால் குளிச்சோலையில் விவசாய பணிகளுக்கு வரும் வெளியாட்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு