செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்: தந்தை-மகள் உடல் நசுங்கி பலி - வேப்பூர் அருகே பரிதாபம்

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தந்தை-மகள் உடல் நசுங்கி பலியாகினர். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

வேப்பூர்,

விருத்தாசலம் ஆயர்மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவரது மகள் திவ்ய பிரியா(19). பி.டெக். படித்து முடித்துள்ள இவர் வங்கி போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அந்த வங்கி தேர்வுக்கு, திருச்சியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், திவ்யபிரியாவுக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திருச்சி செல்வதற்காக தன்னை வேப்பூர் பஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுமாறு திவ்யபிரியா, வேல்முருகனிடம் கூறினார். அதன் பேரில் அவர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேப்பூர் நோக்கி புறப்பட்டார்.

வேப்பூர் அருகே ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் சென்ற போது, எதிரே கோழிக்கூண்டுகள் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம், வேல்முருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் வேல்முருகன், திவ்யபிரியா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வேல்முருகன், திவ்யபிரியா ஆகியோரது உடல்களை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த வேல்முருகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து, பலியான 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதையடுத்து போலீசார் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை