சென்னை,
கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 1,200 கனஅடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 29-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை 146 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கண்டலேறு அணையில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பேபி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டனர். அதன் படி நேற்று முன்தினம் மாலை பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஜெயராமன், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.