செய்திகள்

உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகள் - பொதுமக்கள் அவதி

உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகளால் பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தினத்தந்தி

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்துக்கல்லூரி அருகே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவு பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் இந்த கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் வெளியேறும் சின்னஞ்சிறிய வண்டுகள், அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவலால் மிகவும் குறைவான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதனால் உணவு கிடங்குகளில் பெருக்கம் அடையும் வண்டுகளை மருந்து தெளித்து கட்டுப்படுத்த போதிய பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது.

படையெடுக்கும் வண்டுகள்

இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து அருகில் உள்ள பட்டாபிராம், பாரதி நகர், திருவள்ளுவர் நகர், சத்திரம் பகுதி, கக்கன்ஜி நகர், தீனதயாள் நகர், அண்ணா நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வண்டுகள் படையெடுத்து வருகின்றன. இந்த வண்டுகள் வீடுகளில் குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களிலும், சமைத்து வைத்திருக்கும் உணவிலும் விழுந்து விடுகின்றன.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதால் இந்த வண்டுகளால் இப்பகுதியில் வசிக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாமலும், வீடுகளை வீட்டு வெளியேற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு உணவுபொருள் சேமிப்பு கழக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது