ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிகளுக்கு 2 பார்சல்களும், புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு பார்சல்களும் என 4 பார்சல்கள் வந்திருந்தது.
அந்த பார்சல்களில் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. கடந்த சில தினங்களாக மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதால் சந்தேகம் அடைந்த இலாகா அதிகாரிகள், 4 பார்சல்களையும் பிரித்து பார்த்தனர். அதில் உயர்ரக போதை மாத்திரைகள், பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். 4 பார்சல்களில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 278 போதை மாத்திரைகள், 7 கிராம் போதை பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அங்கிருந்த வாலிபரையும், புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியில் தங்கியிருந்த இளம்பெண்ணையும் கைது செய்தனர். ஆனால் சேலம் முகவரி போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக கைதான பெண் உள்பட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் 7-வது முறையாக போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் பன்னாட்டு விமான சேவைக்கு உலகம் முழுவதும் பல நாடுகள் தடை விதித்து இருந்தாலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெறுவதற்காக சரக்கு விமான சேவையை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதிலும் மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் சிலர் போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.