புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் 377-விதியின் கீழ் எஸ்.ஜெகத்ரட்சகன் (தி.மு.க.) பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் வசதி மையம் அமைக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்படாத அனைத்து விவசாய நிலங்களிலும் சாகுபடி செய்ய வேண்டும். தரிசு நிலம் உள்பட அனைத்து நிலங்களையும் கண்டறிந்து வரைபடம் போட்டு எந்தெந்த வகையான மண்வளம் கொண்டு இருக்கிறது என்று வகைப்படுத்தி சாகுபடி முறைக்கு ஒழுங்குபடுத்த வேண்டும்.
சிறிய மற்றும் துண்டு, துண்டாக உள்ள நிலங்களை ஒருங்கிணைக்க வேண்டும். தரமுள்ள விதைகளை இலவசமாக வழங்க வேண்டும். கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்பட வேண்டும். டிராக்டர்கள், உழவு எந்திரங்கள், அறுவடை எந்திரங்கள், களம் அடிக்கும் கருவிகள், நடவு எந்திரங்கள் போன்ற வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
உயர்ந்து வரும் உற்பத்தி நடவுக்கேற்ப குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இது பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். விலை பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து, அதற்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.
பயிர்காப்பீட்டுக்கான பிரிமீயத்தை அரசே கட்ட வேண்டும். இழப்பீட்டு தொகையை அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளே வழங்க வேண்டும். பழவகைகள், காய்கறிகள், வனப்பயிர்கள் சாகுபடி பரப்பை உயர்த்த வேண்டும். வருமானத்தை பெருக்கவும், கால்நடைகளை அதிகளவில் வளர்க்கவும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
சிறந்த விவசாய முறைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யும் வகையில் தேசிய வேளாண் இணையதளத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.