செய்திகள்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வரும் 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி இரவு 12 மணி வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

* சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் பூவிருந்தவல்லி, ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சிகளிலும் நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.

* அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்