செய்திகள்

பாட்டி-பேத்தியை கடத்திய கந்து வட்டிக்காரர் கைது

திருவண்ணாமலையில் பாட்டி-பேத்தியை கடத்திய கந்து வட்டிக்காரர் கைது செய்துபட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பாரதி (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவரிடம் ரூ.3 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இந்த பணத்திற்கு பாரதி 10 நாட்களுக்கு ஒரு முறை ரூ.300 வட்டியாக மணிகண்டனிடம் செலுத்தி வந்து உள்ளார். இதற்கிடையில் பாரதியின் தாயாரும் மணிகண்டனிடம் பணம் கடன் பெற்று உள்ளார். இவர்கள் இருவரும் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் மணிகண்டனிடம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் மணிகண்டன், பாரதி மற்றும் அவரது தாயாரிடம் ரூ.80 ஆயிரம் நீங்கள் தர வேண்டியது உள்ளது. அதனை உடனே வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன், பாரதியின் வீட்டிற்கு வந்து அவரது 2 மாத பெண் குழந்தையையும், பாட்டியையும் கடத்தி சென்று உள்ளார். இது குறித்து பாரதி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மண்கண்டனை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி சென்ற பாரதியின் 2 மாத பெண் குழந்தை மற்றும் அவரது பாட்டியையும் மீட்டு பாரதியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கந்து வட்டி குறித்து தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.