தேனி,
தேனி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் ஆவர். அதிலும் 18 வயது நிரம்பி முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
வாக்களிப்பது என்பது வாக்காளர்களின் ஜனநாயக கடமை. இந்த கடமையை நேர்மையுடன் ஆற்ற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நேற்று நடந்த தேர்தலில் இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
மக்களோடு மக்களாக வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து வாக்களித்தனர். வாக்களிக்க வந்த இடத்தில் முதியவர்களுக்கு உதவி செய்த நிகழ்வுகளையும் காண முடிந்தது. முதல் முறையாக தேர்தலில் வாக்குப்பதிவு செய்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் வாக்களித்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அவர்களில் சிலரின் கருத்துக்கள் விவரம் வருமாறு:-
வினிதா, கருவேல்நாயக்கன்பட்டி, தேனி:-
எனக்கு வயது 21. நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். முதல் முறையாக இப்போது தான் வாக்களிக்கிறேன். வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 2 நாட்களுக்கு முன்பே விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன். கடைசி நேரத்தில் ஊருக்கு புறப்பட்டு வந்தால் பஸ் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் முன்கூட்டியே வந்து விட்டேன். ஜனநாயக கடமையாற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த ஊரில் இருந்தாலும் வாக்களிப்பதை தவிர்க்கக்கூடாது. இனி வரும் காலங்களிலும் தவறாமல் எனது வாக்கை நேர்மையான முறையில் பதிவு செய்வேன்.
மகிழ்ச்சியாக உள்ளது
கவுசல்யா, கம்பம்:-
எனக்கு வயது 19. நான் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஆசைபட்டு கொண்டே இருந்தேன். வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நிற்கும் போது ஆண்டு இறுதி பொதுத்தேர்வு அறைக்கு செல்வது போன்ற ஒரு உணர்வு இருந்தது. வாக்குச்சாவடியை முதல் முறையாக பார்த்தேன். வரிசையில் நிற்கும் போதே வாக்குச்சாவடி நடைமுறைகளை கவனித்து வந்தேன். முதல் முறை வாக்களிக்கும் போது சற்று பதற்றமாக இருந்தது. வாக்களித்து முடித்தவுடன் எனது ஜனநாயக கடமையாற்றிய மகிழ்ச்சி ஏற்பட்டது.
துர்கேஷ், கம்பம்:-
எனக்கு வயது 21. என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளேன். முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு மாற்றம் வராதா என்ற ஏக்கம் எனக்குள்ளே இருந்தது. அந்த ஏக்கத்தை தணிக்கும் முயற்சியாக எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். இது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அனைத்து இளைஞர்கள், இளம் பெண்களும் இந்த மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் அனுபவிக்க தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.