தேனி :
அமைச்சர் ஆய்வு
தமிழக-கேரள எல்லையான குமுளியில், தமிழக போலீஸ் சோதனை சாவடி மற்றும் மருத்துவ பரிசோதனை மையம் உள்ளது. இந்த மையத்துக்கு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வருகிற பயணிகளிடம் கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது 2 தடுப்பூசி போட்ட சான்று பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவ பரிசோதனை மையத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் பார்வையிட்டார். இதேபோல் சோதனைச்சாவடியில், கேரள மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி அமைச்சர் சோதனை செய்தார்.
குமுளி பஸ்நிலையம்
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், தமிழக பகுதியான குமுளியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை பஸ்நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர், அங்குள்ள போக்குவரத்து கழக பணிமனையை நேரில் சென்று பார்வையிட்டார். பஸ்நிலையம் அமைப்பது குறித்து போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கொசு மருந்து தெளித்தல் போன்ற சுகாதார பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
முன்னதாக, கம்பத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 10 லட்சத்து 44 ஆயிரத்து 558 பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்றும், அதில் முதல் தவணையை 5 லட்சத்து 72 ஆயிரத்து 302 பேரும், 2-ம் தவணையை 2 லட்சத்து 5 ஆயிரத்து 549 பேரும் செலுத்தி இருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் நெல்லையில் இருந்து தடுப்பூசிகள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் பொதுமக்கள் ஓட்டு போட ஆர்வமுடன் செல்வதைபோல், வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், மாநிலத் தேர்தல் பணிக்குழு தி.மு.க. செயலாளர் செல்வேந்திரன், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.