தூத்துக்குடி,
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த செல்லையா மகன் ஜெகன் (வயது 30). இவருக்கும் டெல்சியா (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெகன், அவருடைய தாயார் பாக்கியவதி உள்ளிட்டவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு டெல்சியாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்சியா தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் ஜெகன், பாக்கியவதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.