செய்திகள்

இடி மின்னலுடன் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பலத்த காற்றுடனும், இடி- மின்னலுடனும் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு கனமழை ஓய்ந்த நிலையில் காலை 6 மணி வரை அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றன. அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல் அதன் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச்சென்றன. மழை ஓய்ந்ததும் நேற்று காலை, பஸ் நிலையத்தில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது. இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

மேலும் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், வளவனூர், காணை, நன்னாடு, தோகைப்பாடி, சிந்தாமணி, அய்யூர்அகரம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் செஞ்சி, மணம்பூண்டி, முகையூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதனிடையே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் சென்று அங்கு பலத்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டதோடு கனமழை பெய்தால் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலையம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும், பஸ் நிறுத்தம் பகுதிகள் மற்றும் நடைபாதை பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று பரவாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடியாக மழைநீரை வெளியேற்றி அப்பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

விழுப்புரம்................................83

மணம்பூண்டி...........................73

கோலியனூர்............................68

முகையூர்....................................67

அனந்தபுரம்.............................53

சூரப்பட்டு...............................43

செம்மேடு..................................39

கஞ்சனூர்...................................35

செஞ்சி........................................32

அரசூர்.......................................32

வளத்தி.......................................29

கெடார்......................................25

நேமூர்..........................................13

வளவனூர்.................................12

திருவெண்ணெய்நல்லூர்....12

முண்டியம்பாக்கம்.................10

அவலூர்பேட்டை.............9.20

வல்லம்....................................8.60

வானூர்........................................7

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்