திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை இடைவிடாமல் விடிய, விடிய நீடித்தது. இதன் காரணமாக திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் நேற்று காலை விவசாயிகள் தீவிரம் காட்டினர். வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் வயலில் இருந்து தண்ணீரை வடிய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் பயிர்கள் அழுகி போக வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
வீடுகளுக்குள் தண்ணீர்...
நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் பெய்த கனமழையால் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. வானக்கார தெரு பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தெற்குவீதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. நாகை சாலையில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் தண்ணீர் புகுந்தது. பிறவிமருந்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் மற்றும் பணியாளர்கள் மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் உள்ள வீரன்நகர் நரிக்குறவர் காலனியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி ஆணையர் அருள்முருகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.