செய்திகள்

டெல்லி வன்முறை சம்பவம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

டெல்லி வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீயாக பரவியது. மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற வடகிழக்கு பகுதிகள் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது.

வன்முறையாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கற்களால் தாக்கிக்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டும் வெறியாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வீடுகள், வணிக கட்டிடங்கள், வழிபாட்டு தலங் கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். சுமார் 4 நாட்களுக்கும் மேலாக நடந்த வன்முறையில் அந்த பகுதிகள் போர்க்களம்போல் காட்சியளித்தது.

நாட்டையே உலுக்கிய இந்த வன்முறை சம்பவங்களில் 42 பேர் உயிரிழந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை தொடர்பாக 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் முதல் படிப்படியாக அமைதி நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. பல இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வன்முறையால் பாதித்த இடங்களில் பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை தொடங்கி உள்ளார்கள்.

இந்நிலையில் இன்று இருவேறு இடங்களில் இருந்து மேலும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டு டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.