பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வதட்டூரில் இருந்து ஆவடி வரையும், வதட்டூரில் இருந்து கோயம்பேடு வரையும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆவடி வரை இயக்கப்பட்டு வந்த பஸ்சை நிறுத்திவிட்டு கோயம்பேட்டுக்கு 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரமாக 2 பஸ்களில் ஒரு பஸ்சை நிரந்தரமாக நிறுத்தி விட்டனர்.
ஒரு பஸ்சை மட்டும் இயக்கி வந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களாக அந்த பஸ்சையும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதில்லை. இதனால் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை வதட்டூர் வந்த அரசு பஸ்சை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிறைபிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலான போலீசார், மாநகர போக்குவரத்து கழக மண்டல மேலாளர் சேகர், துணை மேலாளர் பாலசுப்பிரமணியம், போக்குவரத்து ஆய்வாளர் ராபர்ட் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியுடன் கூறினர். பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.