புதுடெல்லி,
இந்தியாவில், கொரோனா வைரசால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதை கட்டுப்படுத்துவது குறித்து 21 மாநில, யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள் மற்றும் கவர்னர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதில், பஞ்சாப், அசாம், கேரளா, சண்டிகார், புதுச்சேரி, கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கார், திரிபுரா, இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம், மேகாலயா, மிசோரம், அந்தமான், தாதர் நாகர் ஹவேலி, டாமன் டையு, சிக்கிம் ஆகிய 21 மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள், கவர்னர்கள் பங்கேற்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டார்.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கொரோனா விவகாரத்தில், முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது 6-வது தடவை ஆகும்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:-
ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு 2 வாரங்கள் ஆகிறது. இந்த அனுபவங்களை ஆய்வு செய்வது அவசியம். எந்த பிரச்சினையிலும் நேரம் மிகவும் முக்கியம். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால், கொரோனா தொற்றை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது.
மற்ற நாடுகளில், கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒரு விவாதப் பொருளாகவே இல்லாதபோது, அதை எதிர்கொள்ள இந்தியா நடவடிக்கைகளை எடுத்தது. ஒவ்வொரு இந்தியனின் உயிரைக் காப்பாற்ற இரவு, பகலாக பாடுபட்டது.
கடந்த சில வாரங்களில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். சாலை, ரெயில், விமான, கடல் போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆனால், இதையும் மீறி, இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதையும் மீறி, மற்ற நாடுகளில் ஏற்பட்டது போன்ற பேரழிவு, இந்தியாவில் ஏற்படவில்லை. இந்திய மக்கள் காட்டிய ஒழுக்கத்தை உலகம் முழுவதும் நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.
இன்று இந்தியாவில் கொரோனாவுக்கு குணமடைபவர்கள் விகிதம் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் இறந்தால் கூட அது துயரமானதுதான். உலகஅளவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பொருளாதார முன்னேற்றம்
கொரோனாவுக்கு எதிரான போராட்டம், ஒத்துழைப்பான கூட்டாட்சி முறைக்கு நல்ல உதாரணம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடுகின்றன.
பல மாநிலங்களின் அனுபவங்கள், உயிரிழப்பை குறைத்து, பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன. கடந்த சில வாரங்களாக, பொருளாதாரம் முன்னேறுவதற்கான அறிகுறி தெரிகிறது.
குறைந்து வந்த மின்சார பயன்பாடு, தற்போது அதிகரித்துள்ளது. உர விற்பனை கடந்த ஆண்டை விட இருமடங்காக உயர்ந்துள்ளது. காரிப் பருவ நடவுப்பணி கடந்த ஆண்டைவிட 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகன தேவை மற்றும் உற்பத்தி, ஊரடங்குக்கு முன்பு இருந்ததில் 70 சதவீதத்தை எட்டி உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் மின்னணு பரிமாற்றம், முந்தைய நிலைக்கு உயர்ந்துள்ளது. இன்னும் நிறைய அலுவலகங்கள் திறந்து விடப்படும். போக்குவரத்து திறந்து விடப்படும். அதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
இந்த நேரத்தில், லேசான மெத்தனம் கூட இந்த போராட்டத்தை வலுவிழக்கச் செய்து விடும். ஆகவே, தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதை மக்கள் கைவிடக்கூடாது. முக கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. கைகளை குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்கு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முதல்-மந்திரிகளுடனான பிரதமரின் ஆலோசனை இன்றும் நடக்கிறது.
கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக உள்ள தமிழ்நாடு, மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, அரியானா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், பீகார், காஷ்மீர், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 15 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.