பெர்லின்
ஐ எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட 16 வயது ஜெர்மன் பெண் தற்போது ஈராக்கில் தடுப்புக்காவலில் இருக்கிறார். தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக அவர் வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும் ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிண்டா எனும் அப்பெண் டெரஸ்டென் நகரின் அருகில் புல்னிட்ஸ் எனும் சிறுநகரைச் சேர்ந்தவராவார். தற்போது ஈராக்கில் உள்ள அவருக்கு தூதரக அதிகாரிகள் உதவி வருவதாகவும் தெரிகிறது. உள்ளூர் மூத்த அரசு வழக்கறிஞரான ஹஸ்ஸே லிண்டாவைப் பற்றி எதையும் உறுதியாக தன்னால் கூற முடியவில்லை என்றார். ஆனால் இரண்டு ஜெர்மன் ஊடகங்கள் தாங்கள் லிண்டாவை பேட்டி கண்டதாகவும் அவர் நாடு திரும்ப விரும்புவதாகவும் சொல்கின்றனர்.
நான் இந்தப் போர், ஆயுதங்கள் அதன் சப்தம் ஆகியவற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.
லிண்டாவின் இடது தொடையில் துப்பாக்கி சூட்டின் காயம் இருக்கிறது. வலது முழங்காலிலும் மற்றொரு காயம் இருக்கிறது. ஹெலிகாப்டர் தாக்குதலின் போது இக்காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
கடந்த வாரம் ஐந்து பெண்களை மோசூல் நகரை கைப்பற்றிய அரசுப் படையினர் கைது செய்ததாகவும் அவர்களுள் இப்பெண்ணும் இருந்ததாக ஜெர்மன் அரசு வழக்கறிஞர்கள் கூறினர். சென்ற கோடை காலத்தில் ஜெர்மனியில் காணாமல் போன லிண்டா துருக்கியை அடைந்ததாகவும் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் அவர் ஈராக் அல்லது சிரியாவிற்கு சென்றிருக்கலாம் என்றும் ஹெஸ்ஸே கூறினார். தற்போது அவர் மீண்டும் செய்திகளில் இருக்கிறார் என்றார் அவர்.