செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சகீராபாத், ஹுசுராபாத், வனபார்தி உள்பட பல பகுதிகளில் ராகுல் காந்தி பேசியதாவது:-

சீனா 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நரேந்திர மோடி 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் வேலைகளை பறிக்கிறார். அவர் ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். உங்களில் யாருக்காவது வேலை கிடைத்ததா? மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்திருக்கிறது.

பா.ஜனதாவுக்கும், சந்திரசேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும் (டி.ஆர்.எஸ்.) ரகசிய கூட்டு உள்ளது. முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பா.ஜனதா அரசை விமர்சனம் செய்தது இல்லை. ஜி.எஸ்.டி., பண மதிப்பு இழப்பு போன்ற நடவடிக்கைகளை ஆதரித்துள்ளது. தெலுங்கானா அரசின் ரிமோட் கண்ட்ரோல் மோடியிடம் உள்ளது.

நீங்கள் டி.ஆர்.எஸ்.சுக்கு ஓட்டுபோட்டால், அது மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஓட்டுபோட்டது போலத்தான். காங்கிரஸ் மட்டுமே பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை எதிர்த்து போராடுகிறது. எங்களை விலைக்கு வாங்க முடியாது. காங்கிரசுக்கும், டி.ஆர்.எஸ்.சுக்கும் இடையே போட்டியில்லை. காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தான் போட்டி.

மோடி எங்கு சென்றாலும் வெறுப்பையும், கோபத்தையும், பொய் வாக்குறுதிகளையும் பரப்புகிறார். காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமான உறுதி திட்டம் பொய் அல்ல. இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இது வறுமைக்கு எதிரான துல்லிய தாக்குதல். ஆனால் மோடி ஏழைகள் மீது துல்லிய தாக்குதல் நடத்துகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது